பாண்டவர்கள் கெளரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்றதனால் நாட்டையும் செல்வத்தையும் விட்டு காடு புக நேர்ந்தது.காட்டு வழியே நடந்து வரும்பொழுது தாகம் எடுக்கவே, அவர்கள் அருகிலுள்ள ஒரு குகையில் அமர்ந்தனர்.ஒரு சிறிய மலையின் மேல் இருந்த அக்குகையிலிருந்து பார்க்கும் பொழுது,கீழே சற்று தூரத்தில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது.அங்கிருந்து தண்ணீர் எடுத்துவர பீமனை அனுப்பினார் தர்மர்.
தண்ணீர் எடுக்கச் சென்று கொண்டிருக்கும்பொழுது,தன் பாதையை ஒரு குரங்கின் வால் தடுப்பதைக் கண்டான் பீமன்.தான் மிகவும் அவசரமாகச் சென்றுகொண்டிருப்பதாகவும், தனக்கு வழிவிடக் கோரியும் அவன் அக்குரங்கிடம் கேட்டான்.சற்று வயது அதிகமான அக்குரங்கு,தன்னால் நகர இயலாது என்றும்,வேண்டுமானால் தன் வாலை அவனே நகற்றி வைத்துவிட்டுச் செல்லலாம் என்றும் கூறியது.பலத்தில் தன்னை மிஞ்ச எவருமே இல்லை என்ற அகந்தையில் இருந்த பீமன், அதன் வாலை நகற்றத் தொடங்கினான்.அவன் தன் பலத்தை முழுவதுமாக உபயோகித்தும் கூட அந்த வால் நகரவில்லை.தனது சக்தி மிகப்பெரியது அன்று,சிறியதே என்பதை அறிந்து அகந்தையிலிருந்து அவன் வெளிவந்த அடுத்த விநாடியே அக்குரங்கின் உண்மையான உருவத்தைக் கண்டான்.பீமன்முன் ஆஞ்சநேயர் அழகாகக் காட்சி தந்தார்.
பீமனுக்கு அனுமன் காட்சி தந்த அந்த இடத்தில் அமையப் பெற்றதே அணைப்பட்டி ஆஞ்சனேயர் கோயிலாகும்.பாண்டவர்கள் தங்கியிருந்த மலை,சித்தர் மலை என்று அழைக்கப்பட்டு வருகின்றது.அக்குகைக்குச் செல்ல வேண்டுமானால்,நடந்தேதான் செல்ல வேண்டும்.தண்ணீர் இருப்பதாக அவர்கள் கண்டது வைகை ஆறாகும்.
இங்குள்ள ஆஞ்சனேயர்,ஒரு கண்ணால் பக்தர்களுக்கு தரிசனம் தந்துகொண்டும் மற்றொரு கண்ணால் அயோத்தியைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறார்.வால் தலைவரை எழும்பி நீளமாக இருக்க, நான்கு கைகளைக் கொண்டு விளங்குகிறார்.மழைகாலத்தில் ஆஞ்சனேயருக்கு அடியில் தண்ணீர் ஊற்றெடுத்து, அவரது கால்களை நனைப்பது சிறப்பு.மதுரையில் இருப்போர் அவசியம் சென்று வரவேண்டிய இடம்.