Wednesday, February 15, 2006

ஊர் சுற்றலாம் வாங்க

நான் சென்று வந்த, ஆனால் மக்களுக்கு அதிகம் தெரியாத சில இடங்களைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் நாம் காணவிருப்பது, மதுரைக்கு அருகில் இருக்கும் அணைப்பட்டி எனும் ஊர்.

அணைப்பட்டி என்ற பெயரிலிருந்தே இங்கு ஒரு அணை இருக்கக் கூடும் என்பதை ஊகித்திருப்பீர்கள். ஆயினும் இவ்வூரின் பெருமைக்கு அணை மட்டுமே முக்கிய காரணமன்று. இங்கு இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலும் ஆகும். மதுரை-கொடைக்கானல் சாலையில் உள்ள நிலக்கோட்டை எனும் ஊருக்கு மிக அருகில் உள்ளது அணைப்பட்டி. மதுரையிலிருந்து நேரடியாக இவ்வூருக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் மிகவும் அரிதே. நிலக்கோட்டைக்குச் சென்று அங்கிருந்து செல்வது சுலபம்.

பேரணை என்று அழைக்கப்படும் இங்குள்ள அணை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை ஆற்றின் நீர் இரண்டு கால்வாய்களின் வழியே சென்று மதுரை மாவட்டத்தை வளப்படுத்துகிறது. இவ்விரு கால்வாய்களின் குறுக்கே ஆங்கிலேயரால் 1892 ஆம் வருடம் கட்டப்பெற்ற தொன்மையான் பாலம் ஒன்று உள்ளது. இப்பாலத்தைக் கடந்து சென்றால் நாம் சற்றும் எதிர்பாராத அழகான, சிறிய ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. இக்கோயிலின் வரலாற்றை அடுத்த பதிவில் காண்போம்.

Monday, February 13, 2006

தமிழ்த் திரைப்பட விருதுகள்


தமிழக அரசு 2003 மற்றும் 2004 ஆண்டிற்கான திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. வழக்கம்போல் இல்லாமல் இம்முறை சொதப்பல்கள் சற்று குறைவு என்று கூறலாம். சில விருதுகளைப் பார்க்கும்பொழுது, எந்த அடிப்படையில் இவர்கள் விருதுகளை அறிவிக்கிறார்கள் என்பது புதிராகவே உள்ளது.

2004 ஆண்டிற்கான சிறந்த நடிகராக M.குமரன் s/o மஹாலஷ்மி படத்திற்காக ‘ஜெயம்’ ரவி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அப்படத்தில் இவரது நடிப்பு நன்றாகவே இருந்தாலும் விருது பெறத் தகுதியானதா என்பதே கேள்விக் குறி.இதே வருடத்தில் வெளிவந்த ‘விருமாண்டி’ படத்தில் கமலது நடிப்பும் பேரழகன் படத்தில் சூர்யா நடிப்பும் நன்றாகவே இருந்தது.இதனைவிட சிறப்பானதா ரவியின் நடிப்பு?

தேசிய விருதுகள் வழங்கும் விதிகளின்படி,பேரழகன் திரைப்படம் மலையாள படத்தைச் சார்ந்து எடுக்கப்பட்டது என்ற காரணத்தால் சூர்யாவிற்கு விருது வழங்கவில்லையென்று வைத்துக் கொண்டோமானால் அதே படத்தில் நடித்த ஜோதிகாவிற்கு சிறந்த நடிகை விருது எவ்வாறு வந்தது.

அடுத்ததாக 2003 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக பாரதிராஜாவின் ‘ஈர நிலம்’ தேர்வாகியுள்ளது. எதற்காக இப்படத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? கருத்திற்காகவா அல்லது எடுக்கப்பட்ட முறைக்காகவா – ஆண்டவனுக்கே வெளிச்சம். அருணாச்சலம் போன்ற மசாலா திரைப்படங்களை அங்கீகரித்த அவலம் ஏற்கனவே நடந்துள்ள நிலையில் ஈரநிலம் தேர்வாகியுள்ளது பெரும் வியப்பல்ல.

ஒளிப்பதிவிற்காக ஏகாம்பரம் (இயற்கை) , பாடகியாக ஹரினி (பார்த்திபன் கனவு),நடன இயக்குனராக அசோக் (திருமலை)போன்ற விருதுகள் நன்று.

ஒரு முறை சொல்லிவிடு போன்ற படங்களைக்கூட விடாமல் பார்த்து அதற்கு விருதும் வழங்கியதை பாராட்டாமல் இருக்க முடியாது.

மொத்ததில் எந்த வித வெளிபாதிப்பும் இன்றி நேர்மையான நோக்கோடு எப்போது தமிழ் திரைப்பட விருதுகள் வெளிவரும்?!


செய்தி: http://sify.com/movies/tamil/fullstory.php?id=14139351
Free Web Counter
Free Hit Counter